i-am-not-hindutva-wala

i am not hindutva wala

May 30 2018 09:37:18 AM

சீர்காழியில் அது 2002 ஆம் ஆண்டில் ஒரு நாள் மாலை. புற்றடி மாரியம்மன் கோவில் தெரு சற்று விசாலமாய் அதே சமயம் கொஞ்சம் இருட்டாக இருக்கும். அந்த வீதி வழியே நடந்து போய் கொண்டிருந்தேன். எனக்கு முன்னே வேட்டி சட்டையில் போய் கொண்டிருந்த பையனை அப்போது தான் கவனித்தேன். நண்பன் மது.  எப்போதும் ஷார்ட்ஸ் அணியும் மது வித்யாசமாக வேட்டி கட்டியிருந்தான். அருகில் சென்று பார்த்தால் கை கால் நெற்றியில் எல்லாம் திருநீறு. “என்னடா இன்னைக்கு சந்த்யாவந்தனம் பண்ணினியா? நீ அதெல்லாம் செய்ய மாட்டியே" என்றேன். இவன் ஆரம்பித்தால் பின் என்னையும் திரும்ப ஆரம்பிக்க சொல்லிவிடுவார்கள் வீட்டில். 

ஏற்கனவே நடராஜன் மாமாவிற்கு பயந்து பயந்து தப்பித்துக் கொண்டிருக்கிறேன் நான் (அவர் பெயரை இங்கு எழுதுவது கூட உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தானே தவிர ஒரு நாளும் அவர் பெயரை உச்சரித்ததில்லை. அவரது பெயரே எனக்கு மாமாதான். மனதளவில் மாமா என்று நினைத்தவுடன் அவர் முகம்தான் முதலில் நினைவில் வரும்). சரி மதுவின் கதைக்கு வருவோம். அவனை கேட்டால் அவன் அதெல்லாம் ஒண்ணுமில்லை நான் பஜ்ரங்கதள்ளில் சேரப்போகிறேன் என்றான். 

பஜ்ரங்கதள் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஒரு முக்கால் மணிநேரம் விளக்கினான். இந்து முஸ்லிம் சண்டை, பாபர் மசூதி பிரச்சினைக்கு தீர்வு என்று எதையெதையோ சொன்னான்.பம்பாய் திரைப்படம் பார்த்த பிறகும்கூட எனக்கு அந்த பிரச்சினை சரியாக புரியவில்லை. அது வேறு கதை.  அவன் சொன்னதில் இருந்து பஜ்ரங்கதள் ஆட்கள்  பிராமணர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வருவார்கள் போலிருக்கிறது என்ற அளவில் புரிந்து கொண்டேன். அதற்கு மேல் எனக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. 

நான் கேட்டேன் “எப்படிடா அதுல சேருவது?”எனக்கு தனிப்பட்ட முறையில் அன்று நிறைய எதிரிகள் இருந்தார்கள். சரி நமக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கட்டுமே என்றுதான் கேட்டுவைத்தேன். அதற்கு அவன் நிறைய கட்டுப்பாடுகள் சொன்னான். முக்கியமாக நினைவில் இருப்பது அடிக்கடி வேட்டி கட்டவேண்டும் என்பது. என்னதான் பாரம்பரிய உடை என்றாலும் எனக்கு வேட்டி கட்டுவதில் இருந்த அசௌகரியமே எனக்கு பஜ்ரங்கதள் மீதிருந்த ஈடுபாட்டை வெட்டிவிட்டது. அன்றோடு அவனிடம் அந்த பேச்சை விடுத்தேன்

பின்னர் நாளிதழ்களின் எல்லாவற்றிலும் அதுபோன்ற இயக்கங்கள் நிகழ்த்திய வன்முறை வெறியாட்டங்கள் படித்து அதன் மீதான எச்சரிக்கை உணர்வும் பின்னாளில் எதிர்ப்பு உணர்வுமே வளர்ந்தது. 

போதாதென்று இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் வேறு ஒரு கையெடுத்து கும்பிடுபவர் படத்தை போட்டு என் மனதை கலங்கச் செய்திருந்தது. நல்லகாலமாக மார்க்ஸ் காப்பாற்றினார் என்னை.  உண்மையாகத்தான் சொல்கிறேன் காப்பாற்றத்தான் பட்டிருக்கிறேன். நீங்கள் இ.பா. சிந்தன் அவர்களின் மொழிப்பெயர்ப்பில் வெளியாகவிருக்கும் புத்தகம் “இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள்” அவசியம் படித்துப்பாருங்கள். எவ்வளவு பெரிய வலையை அவர்கள் வீசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். செய்து வைத்த கொஞ்ச நஞ்ச சமூகசீர்திருத்தங்களையும் அழித்து ஒரு நாட்டை மீண்டும் பலவருடங்கள் பின்னுக்கு தள்ள அவர்கள் எவ்வளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரியும். நான் படித்த பள்ளிகளில் ஒரு உறுதிமொழி எடுக்க சொல்வார்கள். அது இந்தியர் அனைவரும் எனது சகோதர சகோதரிகள் என்று. அதை இவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்.  இல்லை இவர்கள் தான் முடிவெடுப்பார்கள் யார் இந்தியர்கள் என்று.

என்னுடன் வேலை பார்த்த சுரேஷ் அடிக்கடி சொல்வான் “நாங்கள் (அதாவது பா.ஜ.க) ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் அவர்கள் மதத்தை அவர்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். ஏனென்றால் இது இந்துக்கள் நாடு என்பான்”. அதற்கு நான் சொன்ன மறுமொழி இங்கே வேண்டாம். 

ஆனால் அவன் சொன்னது 2012ல். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும் என்னிடம் தொலைப்பேசியில் கொக்கரித்தான். இந்த தேசத்தின் மக்களை எண்ணி கொதித்ததை தவிர அன்று நான் வேறு எதையும் யோசிக்கவில்லை. ஆனால் இன்று இந்த புத்தகம் எனக்கு ஒரு மிகப்பெரிய படிப்பினையை தந்திருக்கிறது. இப்போது  சுரேஷின் மீது எனக்கு பரிதாபம் அதிகரிக்கிறது. எப்படியெல்லாம் இந்த தேசத்தை மதத்தின் பெயரால் ஆட்டுவிக்கிறார்கள்.  என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு கடவுளை நம்புகிறீர்கள் என்பதாலும் அதற்கு குறிப்பிட்ட ஒரு மதத்தில் இருப்பதாலும் எப்படியெல்லாம் மார்கெட்டிங் செய்கிறார்கள். ஆசிரமம் அமைத்து அக்கிரமம் செய்தல், இளைஞர்களை கூலி அடியாட்களாக மாற்றி வன்முறையை கட்டவிழ்த்தல், இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களை அழிக்க யாத்திரை செய்தல், இன்னும் குண்டுவைக்க தூண்டுதல் கொலை செய்ய தூண்டுதல் என முழுக்க முழுக்க அவர்கள் இதை நாடு முழுவதும் செய்யத் தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். அவசரமே காட்டாமல் கிட்டத்தட்ட ஒரு நாற்பது வருடங்களாக பரவியிருக்கிறார்கள். 

அந்தப் புத்தகம் இதை தாண்டி இன்னும் இரண்டு விஷயங்களை பேசுகிறது. அது ராணுவப்பள்ளி என்கிற பெயரில் இந்து தீவிரவாதத்தை வளர்த்தல் சீக்கிய மதத்தை சிறிய மதம் என்றும் அதை இந்து மதத்தினுள் அடக்கம்தான் என்றும் அதை நம்பவைக்க அவர்கள் நகர்த்தும் காய்களும் இருக்கிறதே. அடடா  இன்னமும் இந்த நாடு மக்களுக்கு விழிப்பு தட்டவில்லை என்றால் பன்மையில் ஒருமை என்கிற இந்திய தேசிய ஒருமைப்பாடு கேலிக்கூத்தாகிவிடும்.

பிற்பாடு என் தாய்மாமாவிடம் (இவர் உறவு) ஒருநாள் கேட்டேன். மாமா பஜ்ரங்கதள்னா என்ன? “அது ஒன்னுமில்லடா பஜ்ரங்னா குரங்குன்னு அர்த்தம். வானரப்படை” என்றார். 

இப்போது ஞாபகப்படுத்திப் பார்த்தால் அன்றைக்கு பிறகு நானும் மதுவை அந்த தோற்றத்தில் பார்க்கவில்லை. ஆனால் மது என்னை போல வேட்டி கட்டவேண்டுமே என்பதற்காக அந்த இயக்கத்தை கைவிட்டிருக்க மாட்டான். எனக்கு தெரிந்து அவன் மிகமிக புத்திசாலி. நிச்சயமாக பல இளைஞர்களைப் போல அந்த இயக்கத்தின் கேடுகளை வெகு சீக்கிரமே புரிந்திருப்பான். ஏனெனில் பின்னாளில் அவனே எனக்கு முன் கடவுள் மறுப்பாளன். ஆனான். சாதி மறுப்பு திருமணமும் செய்துகொண்டான். நல்லவேளையாக இந்த புத்தகத்தை அவனுக்கு பரிசாக அளிக்கவேண்டிய நிர்பந்தத்தை காலம் எனக்கு தரவில்லை. 

(தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளியாகவிருக்கும் "இந்துத்வாவின் நிழல் ராணுவங்கள் புத்தகத்தை படித்ததில் எழுந்த நினைவு குறிப்புகள்)

- அசடன் பாலாஜி

Advertisement :
comments

Feedback