vekkai-book-review

vekkai book review

May 30 2018 09:59:48 AM

மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனுக்கு அரசியலில் நேர்மறையிலோ எதிர்மறையிலோ கணிசமான விகிதத்தில் பங்கு உண்டு என்பார் என் மாமா. புரியாமல் விழித்த அன்று சொன்னார். அதோ அந்த வாழைப்பழ கடைக்காரருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமுண்டு ஆனால் அவருக்கு அது தெரிந்திருக்காது.

நீ படிப்பதில், பேசுவதில், ஏன் நீ யோசிக்கும் எந்த ஒரு  செயலிலும் அரசியலில்லாமல் அதன் பின்புலமின்றி இல்லை என்றார். இதை நான் இங்கே சொல்ல ஒரு காரணமுண்டு.

வெக்கை கதையில் வரும் சிதம்பரம் என்னும் பதினைந்து வயது சிறுவனின் பழி தீர்த்தலும் அதன் காராணமும் அதன் விளைவும் ஏன் அதன் முற்றுமே கூட அரசியல் வியாபித்த ஒன்றுதான்.


இக்கதையில் சிதம்பரமும் அவன் அண்ணனும் பல விளையாட்டுகள் விளையாடுகிறார்கள். காடு மலை என சுற்றித்திரிகின்றனர். அவர்களின் இயல்பு வாழ்க்கையிலேயே விளையாட்டு,  அன்றாட ஜீவனம், சண்டை, திருட்டு, கொலை, மருத்துவம் என்று இயைந்திருக்கிறது. வடக்கூரானும் அவன் மச்சினன் ஜின்னிங் பாக்டரி முதலாளியும் அந்த ஊரை வளைத்துப் போட்டுக்கொண்டே வர அதை தன்னளவில் எதிர்த்து நிற்கிறார்கள் சிதம்பரத்தின் அப்பாவும் மாமாவும்.

எதிர்ப்பது என்பது எதிரிகள் இருவரும் களத்தில் இன்றி நடத்தும் பனிப்போர் போல.  அந்த பனிபோரில் வஞ்சிக்கப்பட்டு பலியாகிறான் சிதம்பரத்தின் அண்ணன். (அவன் இயல்புகள் யாவுமே கவனிக்கப்பட வேண்டியவை. நம்மிடமும் அப்படி ஒரு மனிதரின் தாக்கமிருக்கும்). சிதம்பரம் குடும்பத்தில் உறவுகளில் எல்லோருமே வடக்கூரானின் எதிரி என்றாகிப் போகிறது. யார் பழி தீர்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் எல்லோருக்கும் முந்திக்கொள்கிறான் சிதம்பரம். அரிவாள் ஒன்று செய்து கொள்கிறான். குண்டு செய்யக் கற்றுக் கொள்கிறான். ஒரு திங்கட்கிழமை  சாயந்திரம் வடக்கூரானின் கையை வெட்டுவது என்று முடிவு செய்கிறான். ஆனால் இருட்டில் விலாவில் பதம் விழுந்து வடக்கூரான் இறந்து போகிறான்.


இங்கே பழி முடிந்து போகிறது.  பிறகு தான் இயல்பு வாழ்வின் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. அங்கே ஒரு ஓட்டம் ஆரம்பமாகிறது. நினைவுகளில் பல வந்து போகின்றது. அம்மா, அப்பாவியான அத்தை, மாமா, எல்லாவற்றுக்கும் மேலாக தன அப்பா என எல்லாரும் பாதிக்கப்படுகிறார்கள். தன் தந்தையே இப்படி ஒரு அஞ்ஞாத வாசத்தில் அகதியாய் ஒரு கிராமம் விட்டு இந்த கிராமத்தில் வாழ வந்தவர்  என்பதும் இப்போது ஏறக்குறைய தன் நிலையும் அப்படித்தான் என்பதும் புரிகிறது. நீதிமன்றம் சென்று வழக்காடிப் பார்ப்பது என்று முடிவு செய்ய, வழக்கை நடத்த பணம் தேவை. அதை தயார் செய்ய நேரம் தேவை, அன்றாட சோற்றுக்கு பணம் தேவை. ஓரிடத்திலும் தங்க முடியாமல் ஓட பணம் தேவை என்று நல்லவன், கெட்டவன், குற்றம் செய்தவன் செய்யாதவன் எல்லாருக்கும் தேவையான பணம் இங்கே சிதம்பரத்துக்கும் அவன் தந்தைக்கும் தேவையாகிப் போகிறது. அதை சம்பாத்தித்துக் கொண்டு நீதிமன்றத்தில் ஆஜராக  முடிவெடுக்கிறார்கள். அங்கே கொலையை தான் செய்யாததாக சொல்லப்போவதாக முடிவெடுக்கிறார்கள். ஒரு பழி முடிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதன பிறகான வாழ்க்கையை பற்றிய யோசனை உண்டு.

அந்த வாழ்வில் சொல்ல முடியாத சோகங்கள், ஒரு காதல், ஒரு தங்கையின், தாயின் அரவணைப்பு ஒரு மாமனின் வழிகாட்டல் எல்லாம் இருக்கும். அவையெல்லாம் எப்போதும் வேண்டும். ஒரு மனிதன் வாழ்ந்து இறந்து போகும் வரை வேண்டும். அதற்கேனும் அவர்கள் வழக்காடித்தான் ஆகவேண்டும். அதை இழுத்தடிக்க  முயற்சித்து தான் ஆகவேண்டும். எனவே அவர்கள் போராடித்தான் ஆகவேண்டும். நீதிமன்றம் குற்றமாய் பார்த்து அவர்களை தண்டிக்க முயற்சித்தாலும் அவர்கள் தன்னளைவில் இந்த போராட்டத்தை நடத்தித்தான் ஆகவேண்டும், வெட்டப்பட்ட பிறகும் துடிக்கும் உறுப்பு போல. அதை தவறென்று சிதம்பரமோ, அவன் தந்தையோ, வாசகனோ சொல்ல முடியாது. இதன் விளைவு இப்படியெல்லாம் என்பது தெரியும். தெரிய வேண்டும். நம் வாழ்விலும் சிதம்பரம் இருப்பார்கள்.

யோசித்துப் பாருங்கள். நீதிமன்றம், சிறை, காவல்துறை என்று ஒருபக்கம் வாழ்ந்துகொண்டே தாய், தந்தை குடும்பம் நண்பர்கள் என்றும் வாழ்வார்கள். இதை அவலம் என்று சொல்வதா வாழ்க்கை என்று சொல்வதா தெரியவில்லை. ஆனால் எப்போதும் நம் தாத்தாவிடமிருந்து அப்பாவுக்கும், அப்பாவிடமிருந்து நமக்கும், நம்மிடமிருந்து நம் மகனுக்கும்/மகளுக்கும் ஏதோ ஒன்றை மீதம் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. அது யாதென்பதுதான் நம் கையில் இல்லை. அது நம்மை சிதைக்கும், நசுக்கும்,  ஆட்டுவிக்கும், ஒருவேளை முயற்சித்தால் மாறிப்போகும் பொருளாதாரத்தின், அரசியலின் கைகளில் இருக்கலாம்.

ஒரு உதாரணம் என் ஊரில் நடந்தது. அவன் பெயர் யானைக் கார்த்தி. ஒரு மட்டை பந்து விளையாட்டின் போது அவனுக்கும் என் நண்பனுக்கும் தகராறு வர அதில் அவன் என்  நண்பனின் அண்ணனை தரக்குறைவாய் பேசிட அது ஒரு நண்பர்கள் சண்டையிலிருந்து விரிந்து அரிவாள் எடுத்து குடும்ப சண்டையாய் பின் ஒரு ஜாதி சண்டையாய் போய் காவல் துறை தலையீட்டில் முடிந்தது. வெகுநாள் அதன் வஞ்சம் அவர்களுக்குள் புகைந்திருந்தது. இப்படி விளையாட்டுகளும் வன்முறையும் மாறலாம். அனால் ஆடும் மனநிலையும் வன்மமும்  நமக்கு அப்படியே இருக்கிறது தலைமுறை தலைமுறையாய் என்பதை இக்கதை எனக்கு அடித்துச் சொல்கிறது. அது மாறப்போவதில்லை. முயற்சித்துப் பார்க்கலாம்.

- அசடன் பாலாஜி

Advertisement :
comments

Feedback