tips-to-mental-strong

tips to mental strong

Nov 25 2018 07:40:21 AM

ஆரோக்கியமான மனநிலை உங்களுக்கு உளவியல் ரீதியில் ஒரு வலிமையைக் கொடுக்கும்.
ஒருவரின் மனம் வலிமையாக இருந்தால், அவரால் எதையும் எளிதாகவும் சிறப்பாகவும் செய்ய முடியும்.
மனவலிமை மிக்கவர்கள் என்று சிலரை நாம் பார்க்கிறோம். படிக்கிறோம் அல்லது கேள்விப்படுகிறோம். அவர்கள் நமக்கு ஆகக் கடினமாக இருக்கும் வேலைகளைக் கூட வெகு இயல்பாகவும் எளிதாகவும் கச்சிதமாகவும் தவறு இல்லாமலும் செய்து முடித்து விடுகிறார்கள். இது குறித்து நாம் ஆச்சரியமடைகிறோம். நாமும் ஏன் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறோம்.

முடியும். நம்மாலும் அப்படி இருக்க முடியும். எப்படி?

மன வலிமை மிக்கவர்கள் பொதுவாக எந்தெந்த விஷயங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு, அதை நாமும் கடைப்பிடித்தால் நம்மாலும் அப்படி ஆக முடியும்.

தேவை இல்லாத விஷயத்திற்கு அலட்டிக் கொள்ளாதீர்கள்

மன வலிமை மிக்கவர்கள் தங்களின் உணர்ச்சியையோ அறிவையோ தேவையற்ற விஷயங்களில் வீண் விரயம் செய்வதில்லை. இலக்குத்தான் அவர்களுக்கு முக்கியம். ஒரு உதாரணம் சென்னால் உங்களுக்கு விளங்கும். இரண்டு வாகன ஓட்டிகள் மோதிக் கொண்ட பிறகு, இருவரும் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருவர் தவறாக வாகனம் ஓட்டி தன்மீது மோதி இருந்தால், லோசாக ஒரு முறை முறைத்து விட்டு, போக வேண்டிய இடத்திற்குக் கடந்து போய்விடுவார்கள் மனவலிமை மிக்கவர்கள். தான் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும் என்று ஒரு வார்த்தையில் விஷயத்தை முடித்து விட்டுக் கிளம்பி விடுவார்கள். அந்த இடத்தில் சண்டையிடுவது, சக்தியை வீணாக்குவதோடு, போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். 

எனவே உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தேவை எது தேவை அற்றது எது என்று புரிந்து, தேவையானவற்றில் கவனத்தை செலுத்துங்கள். மறந்து விடாதீர்கள் மனவலிமை மிக்கவர்களுக்கு இலக்கு மட்டுமே முக்கியம். வழியில் வரும் தேவையற்ற விபத்துக்களில் தங்களை அவர்கள் இழப்பதில்லை. 

எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்

நெகட்டீவ் தாட்ஸ் எனப்படும் எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் ஏற்படுத்தி உங்களைச் செயலிழக்கச் செய்ய அல்லது, உங்கள் வேகத்தை மட்டுப்படுத்த உங்களைச் சுற்றி நான்கு பேர் எப்போதும் இருக்கிறார்கள். அவர்களிடம் கவனமாக இருங்கள். அவர்களின் விமர்சனங்களையும் வசைகளையும் உணர்ச்சி வயப்படாமல் கேட்டு வையுங்கள்.

நீ செய்யும் காரியம் உருப்படப் போவதில்லை.
உனக்கு அறிவிருக்கிறதா?
ஏன் உனக்கு புத்தி இப்படி முட்டாள்தனமாகப் போகிறது?
இது போன்ற வாக்கியங்களைக் கேட்கும் போது, அதில் உள்ள முட்டாள், அறிவிலி, உருப்படாதவன் போன்ற பதங்கள் உங்கள் ரத்தத்தை சூடேற்றும். உடனடியாக அந்த வார்த்தைகளுக்கு நீங்கள் எதிர்வினையாற்றத் தலைப்படுவீர்கள். அது தேவை இல்லை. அதை விட ஆர அமர உட்கார்ந்து, அந்த வார்த்தைகளை நீக்கி விட்டு, (அந்த வார்த்தைகள் உங்கள் உணர்ச்சியை கீழ்நோக்கித் தள்ளி விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்யப் போவதில்லை) அமைதியாக ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று பாருங்கள்.

உங்களது செயல் உண்மையிலேயே அறிவுப்பூர்வமானதா என்று மீண்டும் ஒருமுறை உரசிப்பாருங்கள். ஆம் என்றால், மேலே செல்லுங்கள். இல்லை என்றால் திருத்திக் கொள்ளுங்கள். கவனம். நீங்கள் செய்வதும் செய்யத் தவறுவதும் உங்களுக்காகத்தானே தவிர பிறரிடம் நல்ல பெயர் எடுப்பதற்கோ அல்லது பிறரின் விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கோ அல்ல. நண்பர்கள், உறவினர்கள், பார்க்கும் திரைப்படம், படிக்கும் புத்தகம் எங்கிருந்து வந்தாலும் நமக்குக் கிடைக்கும் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் அமைதியாக அலசக் கற்றுக் கொள்ளுங்கள். பதில் சொல்வது நமது வேலை
அல்ல. நமது செயல்கள் மட்டுமே பதிலாக அமைய வேண்டும். மனவலிமை மிக்கவர்கள் விமர்சனங்களால் துவண்டு போய்விடுவதில்லை.

இன்னொரு விஷயம் இருக்கிறது. எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் நண்பர்கள் உறவினர்களின் உறவைத் துண்டிப்பது. இதுவும் நல்லதே. முடிந்தால் ஒரேயடியாகத் துண்டிக்கலாம். முடியாவிட்டால் தவிர்க்கவாவது செய்யலாம்.

இலக்கைக் குறிவைத்து செயல்படுங்கள்

மன உறுதியும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் தங்களுக்கென ஒரு தெளிவான இலக்கை வைத்திருப்பார்கள். அவர்கள் இலக்கை நோக்கி மட்டுமே பயணம் செய்வார்கள். வழியில் அவர்கள் திசை தப்பிப் போகவே மாட்டார்கள். ஒருவருக்கு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஆசை. சில பெரிய இயக்குனர்களின் படங்களில் அவர் உதவியாளராக
வேலை செய்திருக்கிறார். தற்போது அவர் தான் சொந்தமாக இயக்கப் போகும் படத்தின் கதை தயாரிப்பில் இருக்கிறார். ஒரு சில நண்பர்கள், உங்கள் கதைக்கு ஒரு புதிய தயாரிப்பாளர் கிடைக்கும் வரையில் டிவி சீரியல் செய்யலாமே என்று யோசனை சொல்கின்றனர். அந்த யோசனையை அவர் ஏற்கவில்லை. சின்னத்திரைக்குச் சென்றால், கடைசி வரையில் சின்னத்திரை இயக்குனராகவே தான் பார்க்கப்படுவோம் என்பது அந்த உதவி இயக்குனரின் எண்ணம். பெரிய படம்தான் என்று முடிவாகி விட்டதற்குப் பிறகு, அவருக்கு வழியில் வரும் சிறு சிறு வாய்ப்புக்கள் ஒரு பொருட்டாகவே இல்லை. இதுதான் இலக்கைக் குறி வைப்பது. மன உறுதி படைத்தவர்கள் இலக்கைக் குறி வைத்து நடப்பார்கள். பக்கவாட்டில் கண்களை மேய விட மாட்டார்கள்.

போட்டியாளர்களை வெல்வதல்ல நோக்கம்

மன உறுதி படைத்தவர்கள் போட்டியாளர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். நீங்கள் சார்ந்த துறையில் உங்களைக் காட்டிலும் ஒருவர் முன்னேறிச் செல்லலாம். கவலைப்படாதீர்கள். நீங்கள் உங்களுக்குப் பிரியமான இடத்தில் இருக்கிறீர்களா? நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை ரசித்து ருசித்து செய்யக் கூடிய வேலையாக இருக்கிறதா?
உங்களின் வேலை உங்களுக்கு சந்தோஷமளிக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ஆம் என்று சொன்னால், நீங்கள் சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். முன்னேற்றம், பதவி உயர்வு, பணம், புகழ் எல்லாம் தானாக வரும்.

அதற்காக நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை. மன உறுதி படைத்தவர்கள், தங்களுக்குப்
பிடித்த வேலையை சோம்பலில்லாமல் செய்வார்கள். போட்டியாளரை மிஞ்ச வேண்டும் என்பதற்காக, தேவை இல்லாமல் சக்தியை வீணாக்க மாட்டார்கள். அவர்கள் இயல்பாகவே போட்டியாளர்களை வெற்றி கொள்வார்கள். 

Advertisement :
comments

Feedback