don-t-hesitate-to-see-psychiatrist

Don't hesitate to see Psychiatrist

Dec 05 2018 18:09:02 PM

உடல் நலம் போலத்தான் மன நலமும். ஆனால் உடல் நலத்தில் நாம் வைக்கும் அக்கறையை மன நலத்தில் வைப்பதில்லை. உடல் நலம் கெட்டால் அதனால் மனநலம் கெடும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை மனநலம் கெட்டால் உடல் நலமும் கெடும் என்பது.

சின்னதாய் வந்து போகும் தலைவலி, வயிற்று வலி, ஒரு சில நாட்களுக்கோ வாரங்களுக்கோ நீடிக்கும் காய்ச்சல், தீர்க்கவே முடியாமல் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும் சர்க்கரை நோய், மரணம் வரையில் கொண்டு சேர்க்கும் கேன்சர் என எத்தனையோ உடல் வியாதிகள் உள்ளதைப் போலவே, மனதிற்கும் பலவிதமான நோய்கள் உள்ளது என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. ஒரே வார்த்தையில் பைத்தியம் என்று சொல்லி முடித்து விடுகிறோம். அது அறியாமை.

உடல் நோய்கள் வந்த உடனேயே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என அக்கறைப் படுகிறோம். சுற்றி இருப்பவர்களும் பரிவோடு விசாரிக்கிறார்கள். அக்கறையோடு பார்க்கிறார்கள். ஆனால் மனநலக் குறைபாடு இருந்தால், அதை நாமும் சரி,
சுற்றி இருப்பவர்களும் சரி பரிகாசமாகவே பார்க்கின்றனர். அதில் பரிகாசப்பட எதுவுமில்லை. உடல் நோய் போலத்தான் மனநோயும் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றாக இருந்தாலும் அவ்வப்போது உடல் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம் அல்லவா? அப்படித்தான் நமது மனநிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒன்றும்
ஆகப்பெரிய பரிசோதனை தேவை இல்லை. நமது அன்றாடக் காரியங்களை செய்வதில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? குடும்ப உறுப்பினர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்களுடன் உறவை சரியாக வைத்துக் கொள்ள முடிகிறதா? இந்தக் கேள்விகளுக்கு முடியவில்லை என்று கூட நீங்கள் பதில் சொல்லலாம். ஆனால் சரி செய்யவே முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் வளர்கிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

மன நலப் பிரச்னை உள்ளவருக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும்:

 • அளவுக்கு மீறி சாப்பிடுவார்... அல்லது மிக மிகக் குறைவாகச் சாப்பிடுவார்.
 • எப்போது பார்த்தாலும் தூங்குவார்... அல்லது தூக்கமே வராது..
 • அன்றாட நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்குவார்.. மனிதர்களிடம் பழகுவது குறையும்...
 • உடம்பில் என்னவென்று சொல்ல முடியாத வலி. 
 • நமக்கு யாருமே இல்லை என்ற எண்ணம்.
 • அவநம்பிக்கை.
 • அளவுக்கு மீறிய புகை, குடி, போதை மாத்திரை.
 • வழக்கத்திற்கு மாறாக குழம்புதல், மறதி, அளவுக்கு மீறிய கோபம், சோர்வு, கவலை.
 • குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எப்போது பார்த்தாலும் சண்டை.
 • திடீர் திடீரென்று மாறும் மனநிலையால் மனித உறவுகளில் சிக்கல் ஏற்படுதல் (ஒருசமயம் பாசத்தைப் பொழிந்துபொங்குவது, இன்னொரு சந்தர்ப்பத்தில் கடுமையான வார்த்தைகளில் ஆத்திரப்படுவது)
 • திரும்பத் திரும்ப அழுத்தும் ஏதோ ஒரு எண்ணத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தல்...
 • காதுக்குள் குரல் கேட்பது...
 • தன்னைத் தானே அல்லது பிறரை சித்ரவதைப் படுத்த விரும்புவது..

இது சும்மா தெரிந்து கொள்வதற்காகத்தான்.. உங்களுக்கோ உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கோ இப்படி ஏதேனும்அறிகுறி இருந்தால் கூச்சப்படாமல் மன நல மருத்துவரை அணுகுங்கள்...

- மனோலயன்

Advertisement :
comments

Feedback