karl-marx

karl marx

May 28 2018 01:15:10 AM

கார்ல் மார்க்ஸ் இறந்த போது அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என ஏங்கல்ஸ் குறிப்பிட்டார். உண்மையில் அவரது சிந்தனைக்கு பிரபஞ்சத்தில் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டம் தொடரும் வரையில் வேலை இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே அவரது சிந்தனை இன்னும் நம் வழியே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மார்க்ஸ்சை ஏழை பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைப் போக்க வந்த ரட்சகன் என்று மட்டுமே நினைத்து குறுக்கி விடக் கூடாது. அவர் ஏழை பணக்காரன் என்ற வர்க்க முரண்பாடுகளைத் தாண்டி, மனிதனுக்கும் இயற்கைக்குமான முரண்பாட்டைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தவர்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமெனில், மானிட சமூகம் ஒற்றுமையாக அதைத் தன்வயப்படுத்தும் போராட்டத்தில் ஈடபட வேண்டும் என நினைத்தவர் மார்க்ஸ்.

அதனால்தான் மானிட சமூகம் ஒன்றாக இணைவதற்குத் தடையாக உள்ள வர்க்க வேறுபாடுகளை களைய வேண்டிய அவசியத்தை அவர் அறிவுறுத்தினார்.

வர்க்க வேறுபாடு எப்படி உருவானது. மூலதனம் எப்படி உருவானது என்ற கேள்விகளுக்கு அவர் கண்ட விடைகள், இன்று வரையில் மாற்ற முடியாத விஞ்ஞான உண்மைகளாகத் திகழ்கின்றன.

பொய் சொல்லாதே!

புறம் கூறாதே!

பிறன்மனை நோக்காதே!

பிறர் சொத்தைக் கவர நினைக்காதே!

கொலை செய்யாதே!

கொள்ளை அடிக்காதே!

அன்பாயிரு!

அறிவை வளர்!

பாசம் பழகு!

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

என்று எத்தனை  தத்துவங்கள், போதனைகள், கருத்துக்கள், அறிவுரைகளை எத்தனை ஞானிகள், மதகுருமார்கள், கவிஞர்கள் காலகாலமாகப் போதித்து வந்திருக்கின்றனர்.

ஆனால் மனிதர்கள் மாறியதாக இல்லை.

காலத்திற்கேற்றாற்போல் குற்றங்கள் புதிய புதிய வடிவமெடுக்கின்றன. போதனைகள் பழையதாகவே இருக்கின்றன.

இதற்கு என்னதான் வழி?

மனிதனை மனிதன் துன்புறுத்தும் பழக்கம்

மனிதனை மனிதன் அடிமையாக்குவது

சுய நலத்திںகாக சகமனிதனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படிச் சண்டையிடுகிறோம் என்பது முக்கியமில்லை. வெற்றி மட்டுமே முக்கியம் என்ற வெறி மாறவே மாறாதா-?--

ஒருவேளை மனிதன் இயல்பிலேயே தீமையானவனா?

இந்த போதனைகளெல்லாமே வீண்தானா?

சில மதங்கள் என்னென்னவோ செய்து பார்த்தன. கெட்ட எண்ணங்களுக்கு சாத்தான் என்று அவை பெயர் சூட்டின. அதன் மூலம் மனிதன் அச்சப்படுவான் என்று மதங்கள் நினைத்தன.

நல்ல எண்ணங்களுக்கு கடவுள் என்று அவை பெயர் சூட்டின. இதனால் மனிதன் பெருமைப்பட்டு அந்த எண்ணங்களை கைக்கொள்வான் என அவை நினைத்தன. கெட்டது செய்தால் நரகத்திற்குப் போவாய் என்று பயமுறுத்திப் பார்த்தன. நல்லது செய்தால் சொர்க்கத்திற்குப் போவாய் என்று ஆசைகாட்டிப்பார்த்தன.

எதுவும் மனிதனை நல்வழிப்படுத்தவில்லை.

ஏன் இப்படி?

மனிதனின் அனைத்து தீமைகளுக்கும் காரணம் அவனின் தீய எண்ணங்கள்தான். அவற்றை மனத்தில் இருந்து எடுத்து விட்டு அதற்குப் பதிலாக நல்ல எண்ணங்களை வைத்து விட்டால் போதும் மனித குலம் திருந்திவிடும் என்பதுதான் போதனையாளர்களின் கணக்கு.

அவர்களின் இந்தக் கணக்கு தவறாகி விட்டது.

ஏன் இப்படி?

இந்தக் கேள்விக்கு விடை கண்ட சமூக விஞ்ஞானிதான் காரல்மார்க்ஸ்.

“மனித குலத்தின் அத்தனை தீமைகளுக்கும் காரணம் மனிதர்களுக்குள் நிலவும் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுதான். அந்த ஏற்றத்தாழ்வு இருக்கும் வரையில், மனிதன் திருந்த மாட்டான். அவனது எண்ணங்களை மாற்ற முடியாது. ஏனெனில் எண்ணங்களின் ஆதாரம் மனத்தில் இல்லை. அது வெளியில் இருக்கிறது.

புறத்தில் நடக்கும் நிகழ்வுகள்தான் மனிதனின் மனத்தில் எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த எண்ணங்களை எடுத்துவிட்டு செயற்கையாக வேறு எண்ணங்களை உள்ளே புகுத்தி விடலாம் என நினைப்பது முட்டாள்தனம். புறச்சூழலை மாற்றினால் தானாகவே எண்ணங்கள் மாறி விடும்” என்றார் மார்க்ஸ்.

உங்களுக்குத் தேவையானவை நீங்கள் கேட்காமலே கிடைத்தால் திருட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வருகிறது?

நீங்கள் சொல்லும் உண்மையை இந்த உலகம் நேர்மையாகக் கேட்கத் தயாராக இருந்தால் நீங்கள் ஏன் பொய் சொல்லப்போகிறீர்கள்?

எனவே எண்ணங்களை மாற்ற முயற்சித்தல் புத்திசாலித்தனமில்லை. உலகை மாற்ற வேண்டும்.  இதுதான் மார்க்ஸ்சின் கணக்கு.

சரி உலகை எப்படி மாற்ற வேண்டும்?

குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையை வளர்த்து கல்வி கொடுக்கும் பொறுப்பு பெற்றோர்கள் தலையில் விழக்கூடாது. குழந்தைகளை அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தக் குழந்தை படித்து முடித்தவுடன், வேலைக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும்.

ஓய்வு பெறும் வயது வந்ததற்குப் பிறகு, வயதானவர்களை காப்பாற்றும் பொறுப்பு பிள்ளைகளின் தலையில் விழக்கூடாது. வயதானவர்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் இளைஞர்களானதும் வேலை கொடுக்க வேண்டும். வயதானதற்குப் பிறகு அவர்களைப் பாதுகாக்க வேண்டும். இத்தனையும் ஒரு அரசாங்கம் எப்படிச் செய்ய முடியும்?

தனிச்சொத்துடைமையை ஒழித்தால் ஒரு அரசாங்கம் இவை அனைத்தையும் செய்ய முடியும். கல்வி நிலையங்களை அரசே நடத்தினால், அனைத்து நிறுவனங்களையும் தொழிற் சாலைகளையும் அரசே நடத்தினால் அனைவருக்கும் அரசால் கல்வியும் வேலையும் கொடுக்க முடியும்தானே?

தனிப்பட்ட ஒருவர் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் வந்தால் என்ன நடக்கும்?

நல்லது நடக்கும்.

லஞ்சம், ஊழல், ஏமாற்று, பித்தலாட்டம், என்ற மனிதனின் சகல தீமைகளும் ஒழியும்.

இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்

பதுக்கிற வேலையும் இருக்காது

ஒதுக்குற வேலையும் இருக்காது”

என்று  கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பாடலில் சொன்னதைப் போல,

சொத்து சேர்ப்பதற்கு அல்லது சேர்த்த சொத்தை பாதுகாப்பதற்குத்தானே அத்தனை தீமைகளும் நடக்கின்றன. சொத்து சேர்க்கவே முடியாது என்ற நிலை வந்தால் அங்கே தீமைகளுக்கு என்ன வேலை?

சொத்து சேர்க்காவிட்டால், பிள்ளைகளின் வருங்காலம் என்ன ஆகும்? என்று கேட்காதீர்கள்.

அவர்களைத்தான் அரசாங்கம் கவனித்துக் கொள்ளுமே. உங்களைப் பற்றியும் கவலை இல்லை. நீங்கள் வேலை முடித்து ஓய்வு பெற்றவுடன் அரசு உங்களைப் பார்த்துக் கொள்ளும்.

சமூகத்தை இப்படித்தான்  மாற்ற வேண்டும் என்றார் மார்க்ஸ்.

மார்க்ஸ் கனவு கண்ட இந்தச் சமூகம்தான் சோஷலிச சமூகம்.

19ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனையாளர் மார்க்ஸ்.

பொதுவாக தத்துவஞானிகள், வரலாற்று ஆசிரியர்களாக இருப்பதில்லை, வரலாற்று ஆசிரியர்கள், சமூகவியலாளர்களாக இருப்பதில்லை. சமூகவியலாளர்கள் அனைவரும் கம்யூனிடுகளாக இருப்பதில்லை. இவர்கள் எல்லோரும் புரட்சிக்காரர்களாக இருப்பதில்லை.

ஆனால் மார்க்ஸைப் பொருத்தவரையில் அவர் தத்துவஞானியாக இருந்தார். வரலாற்று ஆசிரியராக இருந்தார். சமூகவியலாளராக இருந்தார். அரசியல் கோட்பாட்டாளராக இருந்தார். கம்யூனிஸ்டாக இருந்தார்.

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு புரட்சிக்காரராக இருந்தார். அதனால்தான் ஒவ்வொரு துறையையும் அவர் வித்தியாசமான கோணத்தில் பார்த்தார்.

வரலாற்றை மன்னர்களின் வரலாறாக மார்க்ஸ் பார்க்கவில்லை. வர்க்கப்போராட்டங்களின் வரலாறாகவே பார்த்தார்.

மார்க்ஸ்சுக்கு முன்புவரையில் இருந்த தத்துவஞானிகள் அனைவரும், உலகம் எப்படி இருக்கிறது என்பதை விவரித்துக் கொண்டிருந்தனர். மார்க்ஸ் மட்டுமே உலகத்தை எப்படி மாற்றுவது என்ற தத்துவத்தை முன்வைத்தார்.

உலகின் சகல படைப்புகளையும் மூலதனம்தான் செய்தது என்ற சிந்தனையை உடைத்தெறிந்தார்

மூலதனமே உழைப்பால்தான் உருவானது என்பதைக் கண்டு பிடித்து உலகிற்குச் சொன்னவர் மார்க்ஸ். முதன் முதலாக அவர் இந்த உண்மையைக் கண்டறிந்து சொன்ன போது, முதலாளிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.  பொருளாதார மேதைகள் புதிய வெளிச்சம் பெற்றனர்.

மார்க்ஸ் கூறிய கருத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்தினரிடையே ஒரு புதிய சிந்தனையை தோற்றுவித்தது. காலம் முழுக்க தன்னை மூலதனத்தின் அடிமை என நினைத்துக் கொண்டிருந்த தொழிலாளியிடம் நீதான் அந்த மூலதனத்தை உருவாக்கியவன் என்று கூறினால் எப்படி இருக்கும்-?

நீ உருவாக்கிய மூலதனம் உன்னை அடிமை செய்கிறது என்று சொல்லும் போது தொழிலாளி வர்க்கம் எழுச்சி கொள்ளாமல் என்ன செய்யும்?

மார்க்சின் தத்துவம் வெறுமனே மனதிற்கு தற்காலிக ஆறுதல் அளிப்பதோடு நின்று விடவில்லை. அதையும் தாண்டி சமூக மாற்றத்திற்கான வித்தாக இருந்தது.

இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி வர்க்கத்தின் ஒரே நம்பிக்கையாக உள்ள தத்துவம் மார்க்சியம்தான்.

இத்தகைய மகத்தான சிந்தனையாளன் மார்க்ஸ் எப்படி மகத்தான சிந்தனையாளன் ஆனான்-?

மார்க்ஸ்சின் பாணியிலேயே சொன்னால், அவர் பிறந்து வளர்ந்த சூழல் அப்படி!

-தொடர்ந்து பார்ப்போம்

Advertisement :
comments

Feedback