where-did-aryas-live

where did aryas live?

May 30 2018 10:11:15 AM

இந்தியாவில் ஆரிய இனக்குழுக்களின் குடியேற்றம் தொடர்பான தொல்லியல் தரவுகள்இதுவரை அடையாளம் காணப்படாமலேயே இருந்தது.

ரோமிலாதாபர், A.H.தானி, சசிஅஸ்தனா போன்ற வரலாற்றறிஞர்கள் சிந்துவெளி நகரங்களின் சமவெளிப்பகுதியில் கி.மு.2000-கி.மு.1500 வரை நிலவிய செம்புக் குவியல் பண்பாடு (Copper Hoard Culture), சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாடு (Ochered Colour Pottery – OCP), ஜுஹார்பண்பாடு,  H கல்லறைப்பண்பாடு, காந்தார கல்லறைப் பண்பாடு போன்ற தொல் பண்பாடுகளை ரிக்வேத ஆரியரின் குடியேற்றத்துடன் தொடர்புபடுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலே கூறப்பட்ட பண்பாடுகளுக்குரிய குடிகள் கால்நடை வளர்ப்புடன் சிந்துவெளி நகர மக்களை சார்ந்து அவர்களுக்கு சில சேவைகளை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்திய குடிகள் என ரோமிலா தாபர் கருதுகிறார். இன்று ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் வேலை தேடிச் செல்லும் இளைஞர்கள் இரு நாட்டு அரசுகளின் அனுமதியும் பெற்று செல்வதைக் காண்கிறோம். இந்த நாடுகளுக்கு செல்வதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை என்றிருந்தால் அத்தகைய இளைஞர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் அந்நாட்டு நகரங்களை முற்றுகையிடுவர் அல்லவா? இவ்வாறு வேலைக்காக முற்றுகையிடும் இளைஞர்கள் – தடையேதும் இல்லையென்றால் – தாங்கள் குடியேறிய நகரை ஒட்டி தற்காலிக கூடாரம் அமைத்து தங்குவதுதான் இயல்பாக நடக்கும். இப்படித்ததான் கி.மு.2500 லிருந்து மிகவும் செல்வச்செழிப்புடன் விளங்கிய சிந்துவெளி மற்றும் சுமேரிய நகரங்களை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறிய ஆரிய இனக்குழுக்கள் முற்றுகையிட்டு அந்த நகரங்களில் தங்களுக்கென தற்காலிகக் குடியிருப்புகளை தோற்றுவித்திருந்தனர்.

நம் வரலாற்றாய்வாளர்களால் ரிக் வேத ஆரியருடன் தொடர்புபடுத்தப்படும் பண்பாடுகளுக்குரிய மக்கள் இவ்வாறு பிழைப்புக்காக சிந்துவெளி நகரங்களை சார்ந்து வாழும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறியவர்களாகும். பஞ்சம் பிழைப்பதற்காக குடியேறிய மக்கள் கூட்டமாதலால் இவர்கள் தங்களின் முந்தைய குடியிருப்புப் பகுதியிலிருந்து மதிப்புமிக்க பொருட்கள் ஏதுமின்றி குடியேறியுள்ளனர். எனவேதான் ஆரியருக்குரியதாகக் கூறப்படும் பண்பாடுகள் எவற்றிலும் மத்திய ஆசியா அல்லது கிழக்கு ஐரோப்பிய பகுதியின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் காணமுடியவில்லை. இது போன்ற கருத்தையே ரோமிலா தாபரும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பகுதியிலிருந்து மக்கள் குடிபெயரும் போது இரு வகைகளில் நடந்தேறுகின்றன. ஒரு பகுதியில் நன்கு வளர்ந்த பொருள் உற்பத்தியையும் நிலையான குடியிருப்புகளையும் கொண்டு வாழ்ந்த குடிகள் வறட்சி போன்ற இயற்கை காரணிகளாலோ மக்கள் தொகைப் பெருக்கத்தாலோகுடிபெயர்வது உண்டு. இது போன்ற சந்தர்ப்பங்களில் தங்களிடமிருந்த மதிப்புமிக்க உடைமைகளுடன் மக்கள் குடி பெயர்வதுடன் தங்கள் புதிய குடியேற்றப்பகுதியிலும் கருவிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை பழைய மாதிரியில் தயாரிப்பது சிறிது காலம் நீடிக்கும். இத்தகைய பொருள்களின் ஒப்புமையைக் கொண்டு குறிப்பிட்ட பண்பாட்டு மக்கள் எப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்து வந்தனர் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் உலகம் முழுவதுமே நாகரிகக் குடிகளை சார்ந்து சில சேவைக்குடிகள் வாழ்வது நடந்துள்ளது. சேவைக்குடிகள் பெரிய அளவில் மதிப்புமிக்க பொருட்களை உடைமைமையாகக் கொண்டிருப்பதில்லை. இக்குடிகள் புதிய பகுதிகளுக்கு வேலைவாய்ப்பு வேண்டி குடிபெயரும் போது சிரமப்பட்டு சுமந்து செல்லக்கூடிய மதிப்புமிக்க பொருட்கள் ஏதும் அவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் இக்குடிகள் குடியேறிய புதிய இடத்தில் அவர்களுடைய பூர்விகத்தை அடையாளம் காட்டக் கூடிய தொல்லியல் தரவுகள் ஏதும் கிடைப்பதில்லை. இந்திய ஆரியரைப் பற்றி ரோமிலா தாபர் குறிப்பிடுவது இத்தகைய குடிகளுடன் பொருந்தி வருகிறது.

“ ஆரிய மொழி பேசும் மக்களை தொல்பொருள் எச்சங்களைக் கொண்டு அடையாளம் காண்பது ஒருவேளை பயனற்ற முயற்சியாக இருக்கும். இவர்கள் குடிபெயர்ச்சியின் போது மலைகளையும் பாலைவனத்தையும் கடந்து கவனத்தோடு கொண்டு செல்லவேண்டிய மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டிருந்த தனித்தன்மை கொண்ட பண்பாட்டையுடைய இனக்குழுக்கள் அல்லர். ஆனால் அவர்களின் மொழி (இந்தியாவில்) உட்புகுந்திருப்பது அவர்களுடைய இருத்தலை தெளிவாக அறியக்கூடிய அடையாளமாகும். …... ”(Romila Thapar; The Aryan Recasting constructs - 2012)

இவ்வாறு மதிப்புமிக்க பொருட்களை உடைமையாகக் கொண்டிராத குடிகள் தங்கள் முந்தைய இடத்திலும் சேவைக் குடிகளாகவே வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வாறு கூறுவதற்கான தரவுகள் தேவையான அளவிற்கு உள்ளன.

ஆர்ய என்றால் அடியோர்

ரஷ்யாவின் வால்கா பகுதியில் தொடங்கி மத்திய ஆசியாவின் கஜகஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மேனிஸ்தான் என நீண்டு கிழக்கு ஐரோப்பாவின் உக்ரைன் வரை பரவியுள்ள பான்டிக் புல் வெளிப்பகுதியில் (Pontic Steppe) அல்பைன் – ஆர்மினாய்டு குடிகள் கி.மு.7000  லிருந்து சிறுகற்கால வேட்டைக் குடிகளாக வாழ்ந்து வந்தனர்.

கி.மு.5000வாக்கில் புதிய கற்கால விவசாயக் குடிகள் மத்திய ஐரோப்பாவிலிருந்து பான்டிக் புல்வெளியை ஒட்டிய மேட்டுப்பாங்கான பகுதிகளுக்குப் பரவி, பல புதிய கற்கால விவசாயப் பண்பாடுகளைத் தோற்றுவித்தனர். புதிதாகக் குடியேறிய விவசாயக் குடிகளின் வாழ்விடத்திற்கும் மக்கள் வாழத் தகுதியற்ற தாழ்வான புல்வெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேட்டைக் குடிகள் நெருக்கமாகக் குவியத் தொடங்கினர் என தொல் வரலாற்றறிஞர் டேவிட் அந்தோனி (David W. Anthony-1986) குறிப்பிடுகிறார். வேட்டைக்குடிகள், விவசாயக் குடிகளைச் சார்ந்து வாழத் தொடங்கியதால் இவ்வாறு ஒரே பகுதியில் குவிந்தனர் என்றும் அந்தோனி கருதுகிறார்.

இவ்வாறு நாகரிகக் குடிகளுக்கு சேவைத் தொழிலை மேற்கொண்டு வந்த அல்பைன் – ஆர்மினாய்டு குடிகளிலிருந்தே ஆரிய இனக்குழுக்கள் தோன்றின. அடி தொழில் செய்து வந்த மக்கள் என்பதால் இக்குடிகள் அடியோர் என்ற பொருளில் ஆர்ய என அழைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா முழுவதும் பரவிய புதிய கற்கால விவசாயப் பண்பாட்டுடன் ஃபின்னோ-உக்ரியன் மொழியும் பரவியதாகக் கால்டுவெல் உள்ளிட்ட பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பான்டிக் புல்வெளியை ஒட்டிய பகுதிகளுக்குப் பரவிய புதிய கற்கால விவசாயக் குடிகளின் மொழி, முன்னிலை ஃபின்னோ-உக்ரியன் (Proto-Finno-ugrian) மொழியைச் சேர்ந்தது எனக் கூறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. "ஆர்ய" என்ற சொல்லின் தோற்றம் பற்றி அஸ்கோபர் போலோ என்ற ஃபின்னிஷ் அறிஞர் புதிய விளக்கம் ஒன்றை அளிக்கின்றார். தங்களை அடுத்து வாழ்ந்த இந்தோ-ஐரோப்பியர் அல்லது ஆரியரை உள்ளடக்கிய மக்களை ஃபின்னிஷ் மக்கள் தங்களின் ஆளுமைக்கு உட்படுத்திய போது, தங்கள் மொழியில் அடிமையைக் குறிக்கிற "ஓர்ஜா" என்ற சொல்லை அம்மக்களை அழைக்கப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் இச்சொல்லே மறுவி ஓர்ஜா> ஆர்யா> ஆர்ய என்றாகியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.  அஸ்கோபர் போலோ மிகச் சரியாகவே கூறியுள்ளார்.

இந்தியாவிற்குப் பரவிய ஆரிய இனக்குழுக்களின் ஒரு பிரிவினரே கிழக்கு ஐரோப்பாவிலிருந்து மேற்காசிய பகுதிகளுக்கும் பரவினர் என்பதை மொழியியல் அடிப்படையில் உறுதி செய்துள்ளனர். மேற்காசிய பகுதியிலும் இம்மக்கள் தொடக்கத்தில்  அடிதொழில் மேற்கொண்டு வந்து பின்னரே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

டேவிட் அந்தோனி பான்டிக் புல்வெளிப் பகுதியில் கண்ட சேவைக் குடிகளாகவே பாபிலோனிய பகுதிக்கு குடியேறிய ஆரிய இனக் குழுக்கள் வாழ்ந்ததைக் காண்கிறோம். காஸைட் அரசு தோன்றிய விதத்தை ஹால், பின்வருமாறு விளக்குகிறார்.

 “ பாபிலோனியாவின் வடபாலுள்ள மலைப் பிரதேசத்தில் வாழும் காஸைட் மக்கள் முதல் முதலில் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்குக் குதிரைகளைப் பயன்படுத்துவராயினர். இந்தக் காட்டுக் கழுதைகளுக்குக் கடிவாளமிட்டு அவற்றின் மேல் சவாரி செய்து கொண்டு அறுவடைக் காலத்தில் பாபிலோனியாவுக்கு வருவார்கள்; அங்குள்ள குடியானவர்களுக்கு உதவி செய்து ஊதியமாகக் கிடைத்த தானியத்தைக் குதிரை மீது ஏற்றிக் கொண்டு போவார்கள்" (தர்மானந்தகோசாம்பி - பகவான்புத்தர்- பக் 34-35)

இத்தகைய நாடோடி சேவைக் குடிகள்தான் பிற்காலத்தில் காஸைட் அரசைத் தோற்றுவித்ததாக ஹால் குறிப்பிடுகிறார். ஆரிய குதிரை ஓட்டிகளிடம் ஐரோப்பிய நாகரிகக் குடிகள் போரிட்டுத் தோற்றனர் என்றும் கருப்பு நிற நாகரிகக் குடிகள் மண்டியிட்டு சரணடைந்தனர் என்றும் ஐரோப்பிய ஆர்வலர்கள் கதைத்து வருகின்றனர். அதாவது ஆசியப் பகுதிக்குக் குடியேறிய ஆரிய இனக்குழுக்களும் போர்க்குடிகளாகவே இருந்தனர் என்பதே அவர்களின் நம்பிக்கை. ஆனால் நிலைமை அவ்வாறு இருந்ததில்லை.

கி.மு.1800 இல்சிரியாவின் மாரி என்ற அரசின் அரசன் குதிரை ஓட்டம் கற்றுக் கொள்ள விரும்பிய போது அவனுடைய சுற்றத்தார் கீழ்க்கண்டவாறு கூறுகின்றனர்.

“நீ ஹனேயன்களுக்கும் அக்காடியன்களுக்கும் அரசன். நீ குதிரை ஓட்டம் மேற்கொள்ளக்கூடாது. அரசன் தேரையோ, கோவேறு கழுதையையோ ஓட்டடும்; அதன் மூலம் அவன் தன்னுடைய முடியைக் கௌரவித்தவனாவான்.” (Malamat – 1989)

சேவைத் தொழிலை மேற்கொண்ட புறக்குடிகள் சவாரி செய்யும் வாகனம் என்பதால் குதிரையேற்றம் கௌரவக் குறைவாகப் பார்க்கப்பட்டது என்ற விளக்கமே இதற்கு அளிக்க முடியும். இத்தகைய சேவைக் குடிகளின் ஒரு கிளைதான் இந்தியாவிற்கும் குடிபெயர்ந்துள்ளது. வெள்ளை நிற இந்திய ஆரிய இனக் குழுக்களுக்கு கருப்பு நிற மக்கள் எஜமானர்களாக இருந்துள்ளனர் என்பதை வட இந்தியரின் தொன்மங்களும் இலக்கியங்களும் தெளிவாக்குகின்றன. The Hindu (07-04-2015) நாளிதழில் சுமித்பால் (Sumit Paul) எழுதியுள்ள பத்தி இக்கருத்தைத் தெளிவாக நிறுவுகிறது. இந்தத் தரவுகளைக் கொண்டு பார்க்கையில் இந்தோ-ஐரோப்பியரின் ஆசியக் கிளைகள், உடைமைகள் ஏதுன்றி பஞ்சம் பிழைக்க குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது. எனவேதான் இந்தியாவைப் போன்று மேற்காசியப் பகுதிகளிலும் இம்மக்களின் குடியேற்றத்தை உறுதி செய்யும் தொல்லியல் தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

மேலும் அடியோரைக் குறிக்கும் ஓர்ஜாவிலிருந்து தோன்றிய "ஆர்ய" என்ற சொல், இம்மக்கள் ஆசியப் பகுதியில் குடியேறிய சிலகாலம் கழித்து, 'பொதுவர்' (Commoner) என்ற பொருளை அடைந்தது. ஈரானின் ஜெண்ட் அவெஸ்தாவிலும் இந்தியாவின் ரிக்வேதத்திலும் "ஆர்ய" என்ற சொல், 'பொதுவர்' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ஹிட்டைட் மொழியில் "ஆர்ய" என்ற சொல் நண்பன், உறவினன் என்ற பொருள்களைக் குறிக்கின்றது. இப்பகுதிக்கு ஆரிய இனக் குழுக்கள் குடியேறியபோது இங்கு ஏற்கனவே வாழ்ந்த சேவைக் குடிகளுடன் நண்பனாக, உறவினனாக இணைந்து வாழ்ந்துள்ளனர் என்று தெரிகிறது.

இந்திய ஆரியரைப் பற்றிக் கூறும் போது ரோமிலா தாபரும் இது போன்ற கருத்தைக் குறிப்பிடுவது பொருந்தி வருகின்றது.

“ தொடக்க கால ஆரிய மொழி பேசிய மக்கள் மேய்ச்சல் குடிகளாக, இந்தோ-ஈரானிய எல்லையைக் கடந்து நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்காலிகமாக குடியமர்ந்திருக்கலாம். இவ்வாறு எல்லையைக் கடந்து செல்வது வாடிக்கையானதால் அவர்கள் சிறு வணிகப் பொருட்களைச் சுமந்து செல்லும் பணியை மேற்கொண்டிருக்கலாம். இவர்கள், கால ஓட்டத்தில் சிறு குடியிருப்புகள் தோற்றுவித்து  ஏற்கனவே வாழ்ந்துவந்த மக்களுடன் உறவு கொண்டு வாழத்தலைப்பட்டனர். ” (Romila Thapar; The Aryan Recasting constructs - 2012)

மேலே விவாதித்தவற்றிலிருந்து இந்திய ஆரியர் புறஞ்சேரி மக்களாக வாழ்ந்து பின்னர் படிப்படியாக இந்திய சமூகத்துடன் கலந்து மேல்நிலை பெற்றனர் என்பதை அறியமுடிகிறது. வெள்ளை நிற ஆரியர் குதிரையில் வந்த போது அவர்களை தேவர்களாக நினைத்து கருப்பு நிற நாகரிகக் குடிகள் மண்டியிட்டு சரணடைந்தனர் என சில ஆரிய ஆர்வலர்கள் கதைத்து வருகின்றனர். வரலாறு அதற்கு நேர் மாறாக உள்ளது என்பதே உண்மை.

த.தங்கவேல்

(“மீண்டும் ஆரியரைத் தேடி ..” நூலாசிரியர்.)

கண்காணிப்புப் பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) - பணிநிறைவு

Advertisement :
comments

Feedback