marx-in-drunker-s-club

marx in drunker's club

May 30 2018 10:22:15 AM

இப்போதிருக்கும் ஜெர்மனி ஒரு காலத்தில் பல்வேறு தேசங்களாக இருந்தது. அதில் ஒரு தேசம்தான் பிரஷ்யா. 1701 முதல் 1918 வரையில் முதல் உலகப் போரில் ஜெர்மனி தேற்கும் வரையில் பிரஷ்யா ஜெர்மனியிலேயே பெரிய தேசமாக இருந்தது. ஜெர்மனியின் இரண்டில் ஒரு பகுதி பிரஷ்ய அரசின் கீழ்தான் இருந்தது.

பிரஷ்யாவின் மிக முக்கியமான நதி ரைன். ரைன் நதியின் கிளை ஆறு மோசெல். மோசெல் கரையோரம் இருந்த நகரம் ட்ரியெர். ரைன்லாந்து பிரதேசத்தில் இருந்த இந்த நகரம்தான் உலகின் மகத்தான சிந்தனையாளன் மார்க்ஸ் பிறந்த இடம். 1818 மே 5ந்தேதியன்று இரவு ஒன்றரை மணியளவில் மார்க்ஸ் பிறந்தார்.

மார்க்ஸ்சின் தாத்தா ஒரு யூதப் புரோகிதர். மேர் ஹலேலி மார்க்ஸ் என்பது அவரது பெயர். இவரது மூன்றாவது மகன் ஹெச்சல் மார்க்ஸ். வழக்கறிஞர். யூத மதத்தில் இருந்தால் வக்கீல் தொழில் பார்க்க முடியாது என்ற கட்டுப்பாடு அந்தக் காலத்தில் இருந்தது. தொழிலைப் பார்க்க வேண்டுமானால் யூத மத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை. ஹெச்சல் மார்க்ஸ் யூத மதத்தில் இருந்து வெளியேறினார்.

அந்தக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், யூதர்களை மதிப்பதில்லை. புராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களை தங்களை விடக் கீழானவர்களாகக் கருதினார்கள். புராட்டஸ்டண்டுகளை, லுத்தரன்கள் என்று அழைத்தனர். மார்ட்டின் லூதர் இந்தப் பெயர் தங்களை இழிவு படுத்துவதற்காக கத்தோலிக்கர்கள் தங்களுக்கு வைத்தது. எனவே அந்தப் பெயரை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றுதான் கூறினார். ஆனால் பிற்காலத்தில் புராட்டஸ்டண்டுகள், லுத்தரன்கள் என்றால் என்ன இழிவா? அதுவே தங்களுக்குப் பெரிய பெயர் என்று கூறி, தங்களை லுத்தரன்கள் என்று அழைப்பதையும் தங்களது மதக் கோட்பாடுகளை லுத்தரனிசம் என்று அழைப்பதையும் பெருமையாகக் கருதினார்கள்.

டிரியர் நகரில் பெரும்பான்மை மதம் கத்தோலிக்க கிறிஸ்தவம்தான். ஹெச்சல் மார்க்ஸ் யூத மதத்தை விட்டு மாறுவதாக இருந்தால், கத்தேலிக்க மதத்திற்குத்தான் மாறி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு அவரது மனம் ஒப்பவில்லை. மதம் மாறுவது என்று முடிவெடுத்தாயிற்று. ஓரளவுக்கு முற்போக்கான மதத்திற்கு மாறலாமே என்ற நினைத்து புராட்டஸ்டண்டு மதத்திற்கு மாறினார். அவரது பெயர் ஹென்ரிச் மார்க்ஸ் என மாறியது.

ஹென்ரிச் மார்க்ஸ் ஒரு வழக்கமான மதப்பிரியராக இல்லாமல் இருந்ததற்குக் காரணம் இருந்தது. மத விடுதலை பற்றிப் பேசிய சிந்தனையாளர் வால்டேரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் ஹென்ரிச்.  மனித விடுதலை, சுதந்திர வர்த்தகம் என்ற புதிய கருத்துக்களால் பிரான்ஸ் தேசத்தில் ஒரு அசைவை ஏற்படுத்தியவர் வால்டேர். ஹென்ரிச்சுக்குப் பிடித்த மற்றொரு சிந்தனையாளர், இம்மானுவேல் கான்ட்.

தத்துவ விஷயங்களில் ஆர்வம் கொண்ட ஹென்ரிச்சுக்கு மகனாகப் பிறந்ததால் கார்ல் மார்க்ஸ்சும் தத்துவ விஷயங்களில் ஆர்வம் காட்டினார் எனக் கூற முடியாது. தந்தை எதில் ஆர்வம் கொண்டிருக்கிறாரோ அதற்கு நேர்மாறான விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பதுதான் பெரும்பாலான பிள்ளைகளுக்கு வழக்கம். இதற்குக் காரணம் பிள்ளைகளிடம் பெரும்பாலான அப்பாக்கள் ஜனநாயகமாக நடந்து கொள்வதில்லை. பெரும்பாலும் அடக்குமுறைகளையே கையாள்வார்கள். சொன்னதைக் கேட்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் ஹென்ரிச் தனது மகன் கார்லிடம் அப்படி நடந்து கொள்ளவில்லை. ஒரு நண்பரைப் போலவே நடந்து கொண்டார். கார்ல் ஒரு சிறந்த சிந்தனையாளராக வளர்ந்தற்கு இது ஒரு முக்கியமான காரணம்.

தந்தை ஹெச்சல் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவராக இருந்தாலும், தாயார் ஒரு சாதாரண யூத மதப் பெண்மணிதான். அவரது பெயர் ஹென்ரிட்டா. நெதர்லாந்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் கடுமையான மதப் பற்றாளர்கள். ஹென்ரிச் புராட்டஸ்டண்டு மதத்திற்கு மாறினாலும், ஹென்ரிட்டா மதம் மாறவில்லை. அவரது பெற்றோர் இறந்ததற்குப் பிறகுதான் ஹென்ரிட்டா மதம் மாறினார்.

கார்ல் விஷயத்தில் பிள்ளை நன்றாகப் படித்து, பட்டம் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு வழக்கமான தாயாகத்தான் ஹென்ரிட்டா இருந்தார். இதனாலேயே அம்மாவுக்கும் பிள்ளைக்கும் கடைசிவரையில் ஒத்துப்போகவில்லை. உலகம் முழுவதும் நல்லபிள்ளை என்று பெயர் எடுத்திருந்தாலும் மார்க்ஸ் அவரது அம்மாவைப் பொருத்தவரையில் கெட்டபிள்ளைதான்.

மார்க்ஸ் தனது 12வது வயது வரையில் ஆரம்பப் படிப்பை வீட்டிலேயே படித்தார். 1830ல் அவர் உயர்படிப்புக்காக அந்த ஊரில் இருந்த பிரடரிக் வில்லியம் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஐந்து வருடம் பள்ளியில் உயர்படிப்பு. இந்தப் படிப்பில் பல்வேறு மொழிப்பாடங்கள் இருந்தன. லத்தீன், கிரேக்கம், ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மொழிகளை மார்க்ஸ் கற்றார்.

வாழ்க்கை இரண்டு விதமானது. ஒன்று தனக்காக வாழ்வது. மற்றொன்று சமூகத்திற்காக வாழ்வது. மார்க்ஸ் சமூகத்திற்காக சிந்தித்த, வாழ்ந்த ஒரு மனிதர். அவர் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் தேர்வு செய்யப் போகிறார் என்பது, அவர் பள்ளியில் எழுதிய ஒரு கட்டுரையில் வெளிப்பட்டது.

இப்போதும் கூட நமது பள்ளிப் பிள்ளைகளுக்கு நீ எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்? என்ற தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அதைப் போன்றதொரு கட்டுரையை மார்க்சை அவரது பள்ளியில் எழுதச் சொன்னார்கள்.

அந்தக் கட்டுரையில் மார்க்ஸ், “நாம் விரும்பும் நிலையை அடைவோம் என்பது நிச்சயமில்லை. ஏனெனில் நாம் எந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என நிச்சயம் செய்வதற்கு முன்பே, சமூகத்துடனான உறவுகள் நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன” என்று எழுதினார்.

நாம் விரும்புவதெல்லாம் நடந்து விடுவதில்லை என்ற எதார்த்தத்தை சுட்டிக்காட்டிய மார்க்ஸ், அதற்கான காரணத்தையும் கூறுகிறார். நாம் என்ன விரும்புகிறோம் என தீர்மானிப்பதற்கு முன்பே சமூகத்துடனான நமது உறவு தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்கிறார்.

சமூகத்துடனான உறவுதான் நாம் என்னவாக வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது என்ற கருத்து, இளம் வயதிலேயே மார்க்ஸ்சுக்கு இருந்தது ஆச்சரியமான உண்மை.

பிறகு என்ன தான் செய்வது?

மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் இதற்கான பதிலை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

“பெரும்பான்மை மனிதகுலத்திற்கு நன்மை செய்யும் ஒரு தொழிலைத் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்து விட்டால், உலக வாழ்க்கை நமக்கு சுமையாக இருக்காது. சமூகத்திற்காக நாம் செய்யும் தியாகம் நமக்கு அளிக்கும் சந்தோஷம் எல்லையற்றது.”

என்று அவர் அந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். இளம் பருவத்தில் எழுதிய இந்த வரிகளை, வார்த்தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுத்து தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்தார் மார்க்ஸ்.

ஐந்து வருடம் பள்ளிப் படிப்பு முடிந்தது.

மார்க்ஸ் உயர் படிப்பில் தத்துவம் அல்லது இலக்கியம் படிக்கத்தான் விரும்பினார். ஆனால் மார்க்ஸ்சின் தந்தை அதை விரும்பவில்லை.

தத்துவம் படித்து என்ன பிரயோஜனம்? பிழைப்புக்கு வழி சட்டம் படிப்பது தான். எனவே வக்கீலுக்குப் படி என்று மார்க்சிடம் கூறினார் ஹென்ரிச். மகனின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காத தந்தைதான் எனினும், மகன் நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எல்லாத்தந்தைகளுக்கும் உள்ள விருப்பம் அவருக்கும் இருக்கும்தானே.

டிரியெர் நகருக்கு அருகே உள்ள பான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் 1935ம் வருடம்  அக்டோபர் 17ந்தேதியன்று மார்க்ஸ் சேர்ந்தார். அப்பாவின் நிர்ப்பந்தத்தினால் சட்டம் படிக்கச் சேர்ந்த மார்க்ஸ்சுக்கு படிப்பில் நாட்டம் செல்லவில்லை. ஒழுக்கமில்லாத மாணவன் என்று பெயரெடுத்தார். பல்கலைக்கழகத்தில் இருந்த குடிகாரர்கள் சங்கத்தில் உறுப்பினரானார். ஒருகட்டத்தில் அவர் அதற்குத் தலைவராகவே ஆனார்.

மகனின் இந்தப் போக்கு தந்தையை மிகவும் கவலைக்குள்ளாக்கியது. பான் பல்கலைக்கழகத்தில் இனியும் தொடர்ந்தால் மகன் மிகவும் கெட்டுப் போய்விடுவான் என்று நினைத்த ஹென்ரிச், பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்க்க நினைத்தார்.

பான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஒரு வருடம்தான் ஆகியிருக்கும். அந்த ஆண்டு கோடை விடுமுறையோடு, பான் பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்தது. இந்த கோடை விடுமுறை மார்க்சின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாகும்.

இந்த விடுமுறையில் தான் தனது காதலி ஜென்னியுடன் திருமணத்திற்கான ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார் மார்க்ஸ்.

- க.சிவஞானம்

தொடரும்.....

Advertisement :
comments

Feedback