3

மார்க்ஸ் 3: அன்புக்காதலி ஜென்னி

Jun 06 2018 00:05:40 AM

டிரியர் நகரில் மார்க்சின் வீட்டிற்கு பக்கத்து வீடுதான் ஜென்னியின் வீடு. அவரது தந்தை லட்விக் வான் வெஸ்ட் பாலென் ஒரு அரசு அதிகாரி.  இவரது குடும்பமும் மார்க்சின் குடும்பமும் நட்போடு பழகிவந்தனர். சிறுவயதிலிருந்தே இரண்டு குடும்பத்தின் குழந்தைகளும் ஒன்றாக விளையாடி வந்தனர்.

மார்க்ஸ் சின்ன வயதிலேயே புத்திசாலியாக இருந்தது ஜென்னியின் தந்தை லட்விக்கை மிகவும் கவர்ந்தது. அவர் மார்க்ஸ்சை சிறுவன் என்று நினைக்காமல் ஒரு தோழனை போலவே பழகிவந்தார். ஏற்கனவே மார்க்ஸ்சின் தந்தையும் மார்க்ஸ்சுடன் ஒரு நண்பரை போல பழகிவந்தார்.

சின்னவயதிலேயே மார்க்ஸ்க்கு கிடைத்த இந்த முதிய நண்பர்கள் அவருக்கு நிறையவிஷயங்களை கற்றுக்கொடுத்தனர். ஜென்னியின் தந்தை ஒரு அரசு அதிகாரியாக இருந்தபோதிலும் கலை, இலக்கியம் போன்றவற்றில் ஆர்வமுடையவராக இருந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கிரேக்ககாவியங்கள் ஆகியவற்றிலிருந்து சுவாரஸ்யமிக்க காட்சிகளை உணர்ச்சிபூர்வமாக விவரிப்பார். மார்க்ஸ்சுக்கு இது மிகவும் பிடிக்கும். மேலும் பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் ஸான்ஸீமன், பூர்யே போன்றவர்களின் சமத்துவ கொள்கைகள் குறித்தும் ஜென்னியின் தந்தை நிறைய பேசுவார். மார்க்ஸ் சுக்கு சின்ன வயதிலேயே இலக்கியம், அரசியல், தத்துவம் போன்றவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டதற்கு லட்விக் ஒரு மிக முக்கியமான காரணம்.

மார்க்ஸ் ஜென்னி வீட்டுக்குப் போய்விட்டால், அங்கு ஒரே கவிதை மழைதான். ஜென்னிக்கு மார்க்ஸ்சின் கவித்திறனும், அறிவுக்கூர்மையும் மிகவும் பிடித்துப் போயிற்று.

மார்க்ஸ்சுக்கு ஜென்னியைப் பிடித்திருந்ததில் ஆச்சரியமில்லை. டிரியர் நகரிலேயே அழகி என்று பெயரெடுத்திருந்த ஜென்னியை யாருக்குத்தான் பிடிக்காது. ஜென்னியின் அழகைத் தவிர, அவரிடம் இருந்த அறிவுக்கூர்மை, பொறுமை போன்ற குணாதிசயங்களும் மார்க்ஸ்சுக்குப் பிடித்திருக்க வேண்டும். அவர்களுக்கிடையில் காதல் ஏற்பட்டது.

மார்க்ஸ் ஜென்னி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது என்று சொன்னால் யாருமே ஆச்சரியப்படத்தான் செய்வார்கள். ஏனெனில் மார்க்ஸ் புத்திசாலியாக இருந்தாலும் கொஞ்சம் முரட்டுத்தனமாவர். பார்ப்பதற்கும் அவ்வளவு லட்சணமாக இருக்கமாட்டார். ஆடை அலங்காரம் போன்றவற்றில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் அழுக்காக திரியக்கூடியவர்.

இப்படிப்பட்ட ஒரு நபரை ஜென்னி தனது காதலராக தேர்ந்தெடுத்தது ஆச்சரியம் தானே. ஒருவேளை ஜென்னி, மார்க்ஸ்சின் புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரது அக அழகை ரசித்திருக்கலாம்.

பிற்காலத்தில்  மார்க்ஸ்சுடன் வாழ்ந்தபோது எவ்வளவுதான் துன்பங்களும் துயரங்களும் வந்த போதிலும் அவற்றை மனம்கோணாமல் அவர் ஏற்றுக்கொண்டதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.

மார்க்ஸ் பள்ளிப் படிப்பை முடித்திருந்த போது அவருக்கு வயது 17. ஜென்னிக்கு வயது 21. அவர் மார்க்சை விட நான்கு வயது மூத்தவர். இந்த நேரத்தில்தான் இருவரும் ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இருக்க முடியாது என அறிந்து கொண்டனர்.

1936ல் பான் பல்கலையில் இருந்து கோடை விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தார் மார்க்ஸ். அப்போது ஜென்னியும் மார்க்ஸ்சும் திருமணம் செய்து கொள்வது என ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  இந்தத் தகவல் முதன் முதலில் மார்க்ஸ்சின் தந்தைக்குத்தான் தெரிந்தது. ஜென்னியின் குடும்பம் வசதியானது. பிரபுக்கள் வம்சம். அவர்கள். ஒரு சாதாரண வக்கீலின் பிள்ளைக்குத் தனது பெண்ணைக் கொடுப்பார்களா? இது சரிவருமா? என ஹெய்ன்ரிச் நினைத்தார். மகனிடமும் பக்குவமாகச் சொல்லிப் பார்த்தார். அவரது பேச்சு எடுபடவில்லை.

மார்க்ஸ்சின் தாயார் ஹென்ரிட்டா ஏற்கனவே தனது பிள்ளை உருப்படாதவர் என்று நினைத்துக் கொண்டிருந்தவர். அவரும், ஹென்ரிச்சும் சேர்ந்து ஜென்னியிடம், ‘நீ அவனை திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருக்க முடியாது’என்று கூறினர். எதுவும் மார்க்ஸ், ஜென்னி காதலை உடைக்க முடியவில்லை. அவர்கள் உறுதியாக இருந்தனர். மார்க்ஸ்சின் உறுதி குறித்து கூட ஹென்ரிச்சுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் ஜென்னியின் உறுதியைப் பார்த்து மலைத்துப் போனார் ஹென்ரிச். மார்க்ஸ் பெர்லின் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கப் போனதற்குப் பிறகு ஒருநாள், ஹென்ரிச் மார்க்ஸ்சுக்கு கடிதம் ஒன்று எழுதினார்.

அதில் அவர், “உன்னை விட்டு ஜென்னியை ஒரு அரச குமாரனால் கூட பிரிக்க முடியாது. அவள் தனது உடலையும் ஆத்மாவையும் உன்னிடம்தான் வைத்திருக்கிறாள். இதை மறந்து விடாதே. இந்த விஷயத்தில் அவள் ஒரு மகத்தான தியாகத்தை செய்திருக்கிறாள்-” என்று எழுதியிருந்தார்.

மார்க்ஸ்சைத் திருமணம் செய்தால் கடைசி வரையில் சந்தோஷம் கிடைக்காது. துன்பமும் துயரமும்தான் என்பதை முன்கூட்டியே எப்படித்தான் உணர்ந்தாரோ ஹென்ரிச். உண்மையில் மார்க்ஸ்சுடன் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் ஜென்னி பெரும் துயரங்களைத்தான் அனுபவித்தார். அவள் மார்க்ஸ்சைக் காதலிப்பதே ஒரு தியாகம்தான் என ஹென்ரிச் சொன்னதில் ஒருவகை உண்மை இருந்தது. 

ஜென்னியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், நன்றாகப் படித்து, நல்ல சம்பாத்தியம் தரும் உத்தியோகத்திற்குப் போக வேண்டும் என்று மார்க்ஸ் நினைத்தார். படித்து முடித்து வேலை கிடைக்கும் வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் காத்திருப்பது என்று ஜென்னியும் மார்க்ஸ்சும் முடிவு செய்தனர்.

மார்க்ஸ் உற்சாகமாக பெர்லின் பல்கலைக் கழகத்திற்குக் கிளம்பினார். அங்கு அவருக்கு மற்றொரு புதிய உலகம் காத்திருந்தது. அது தத்துவ உலகம். 

-க.சிவஞானம்

தொடர்ந்து பார்க்கலாம்......

 

Advertisement :
comments

Feedback