this-cafe-serves-confidence

THIS CAFE SERVES CONFIDENCE

Dec 01 2018 12:04:37 PM

வாழ்க்கையில் நாம் சில சமயங்களில் எடுக்கும் விபரீத முடிவுகள் சாகும்வரை நம் மனதில் ஆரா ரணங்களை விதைத்துவிடும். ஒருநிமிட தவறான சிந்தனையால் தற்கொலை முடிவு எடுத்து, உயிர்பிழைத்து வாழ்வதென்பது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதை நம் கண்முன் நிரூபிக்கின்றனர் ராயப்பேட்டையில் உள்ள `ரைட்டர்ஸ் கஃபே' வில் பணிபுரியும் பெண்கள்.

முகத்தில் தெரியும் இவர்களின் சிரிப்பு நம் மனதை கனமாக்குவதாக அமைவது அவர்களுக்கு புரிவதால் தங்களின் எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றனர். புத்தகங்களின் வாசத்துடனான புதிய முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த காபி ஷாப் வாடிக்கையாளர்களுக்கு வயிற்றுப்பசியை போக்குவதுடன் அறிவுப் பசிக்கும் கொஞ்சம் விருந்தளிக்கின்றது. நூலகம் போல காட்சியளிக்கும் இங்கு எண்ணற்ற புத்தகங்கள் சங்கமித்திருப்பதை நம்மால் உணர முடிகிறது. நண்பர்களுடன் சாப்பிட வரும் பலருக்கும் இந்த இடத்தைவிட்டு நகர சற்று கஷ்டமாகத்தான் இருக்கின்றது.


அடக்க முடியாத சிரிப்புதான் அஸ்மாவின் அடையாளம். தீயில் கருகிச் சுருங்கிய தசைகள் ஒவ்வொரு சிரிப்பின்போதும் இழுக்கப்படும் வலியை நம்மாலேயே உணர முடிகிறது. ஆனாலும் அஸ்மாவால் சிரிக்காமல் பேச முடியவில்லை.

``2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை என்னால் மறக்க முடியாது. காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மூணு குழந்தைங்க. வீட்டுக்காரருக்கு, பயங்கரக் குடிப்பழக்கம் உண்டு. கையில் எது கிடைச்சாலும் என் மேல தூக்கி அடிப்பார். பலமுறை மண்டையும், கை-காலும் உடைஞ்சு ரத்தம் கொட்ட நின்னிருக்கேன். ரோடு பெருக்கும் வேலைக்குப் போயிட்டிருந்தேன். வண்டி இழுத்து, தெருவெல்லாம் பெருக்கி வேலை முடிச்சக் களைப்போடு வீட்டுக்கு வந்தா, சந்தேகப்பட்டு அசிங்க அசிங்கமாப் பேசுவார். நம்பவைக்க நானும் எவ்வளவோ போராடினேன். ஆனா முடியலை.

`இப்படியே போயிட்டிருந்தா, மனுஷன் திருந்த மாட்டான்... சும்மா பயம்காட்டிப் பார்ப்போமே!’னு வீட்டுல இருந்த ஸ்டவ்ல இருந்து மண்ணெண்ணெயை எடுத்து லேசா மேல ஊத்திக்கிட்டேன். எம் புருஷன் எதிர்லதான் உட்கார்ந்து இருந்தார். `கொஞ்சூண்டு பத்திக்கிட்டதும் பயந்துடுவாரு... திருந்திடுவாரு’னு நினைச்சேன்.  ஆனா, எனக்கு அடுத்த நாள் பொழுது ஆஸ்பத்திரியில்தான் விடிஞ்சது. பத்தின நெருப்பு, என் கழுத்து, கை, கால்கள் எல்லாம் பரவி, பாதி உடம்பைப் பதம் பார்த்திடுச்சு.

மரண வேதனை அது. ஆஸ்பத்திரியில் இருந்த நாட்கள், நரகத்தைவிடக் கொடுமையானது. கை, கால்களை அசைக்க முடியாம ரோபோ மாதிரி படுத்துக் கிடந்தேன். உடம்பு முழுக்க எறும்பு மொய்க்கும். என் புருஷன் என் கால்ல விழுந்து கதறி, மன்னிப்பு கேட்டார். என்னைக் குளிக்கவைக்கிறதுல இருந்து, உடம்பைச் சுத்தப்படுத்துறது, இயற்கை உபாதைகளுக்கு உதவுறதுனு எல்லாத்தையும் பார்த்துக்கிட்டார். `சரி... என் உடம்பு கருகின பிறகாவது மனுஷன் திருந்தினாரே!’னு சந்தோஷப்பட்டேன்.

வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தாங்க. நான் பெத்த குழந்தைங்களே என்னைப் பார்த்து அலறி, `இது எங்க அம்மாவே இல்லை'னு ஓடினதைப் பார்த்துத் துடிச்சேன். அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாம் என்னை `பேய்’னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. விலகிப் போவாங்க. `எனக்கு நோய் இல்லீங்க... தோல்தான் மாறிடுச்சு. என்கிட்ட சாதாரணமா பேசுங்க'னு கெஞ்சினேன். ஆனாலும் எல்லாரும் அருவருப்பாப் பார்த்தாங்க. வீட்டுக்காரர் சமைச்சு வெச்சுட்டு வேலைக்குப் போவார். என்னோட அஞ்சு வயசுப் பெண் குழந்தை, என்னை எழுப்பி உட்காரவெச்சு சாப்பிடவைக்கும். ஒரு வைராக்கியத்துல கொஞ்சம் கொஞ்சமா வேலைசெய்ய பழகினேன். அசைக்க முடியாத கை, கால்களை ஓரளவு அசைக்க முடிஞ்சது.

`பிசிவிசி’ (Prevention Crime & Victim Care) தொண்டு நிறுவன ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டாங்க. பிசியோதெரபியும் இன்னும் வேற சிகிச்சைகளும் கொடுத்தாங்க. வின்னர்ஸ் பேக்கரியில் பயிற்சிகள் கொடுத்தாங்க. டெசர்ட் பண்ணக் கத்துக்கிட்டேன். `ஹாட் பிரட்ஸ்’ மகாதேவன் சார் எங்களுக்காகவே `ரைட்டர்ஸ் கஃபே' ஆரம்பிச்சு, அதுல வேலையும் போட்டுக் கொடுத்திருக்கார். முன்னாடி எல்லாம் நாலு பேருக்கு எதிர்ல நடக்கவே அசிங்கமா இருக்கும். `நாமளே நம்ம வாழ்க்கையைச் சிதைச்சுக்கிட்டோமே’னு கூனிக்குறுகியிருக்கேன். வேலையும் பொருளாதாரச் சுதந்திரமும் இப்ப அந்த எண்ணத்தை மாத்தியிருக்கு. என் முகத்தை இப்போ மூடுறது இல்லை. என் குழந்தைங்களுக்கு நான் அழகானவளா தெரியுறேன். அவங்களுக்காக வாழணும்கிற நம்பிக்கை வந்திருக்கு''  - வழியும் கண்ணீருக்கு இடையிலும் அழகாகச் சிரிக்கிறார் அஸ்மா.

துருதுரு பேச்சிலும் கலகல சிரிப்பிலும் குழந்தைத்தனம் மாறவில்லை ப்ரியதர்ஷினியிடம். கஃபேவின் காபி மாஸ்டர் இவர்தான்.

``எப்பப் பார்த்தாலும் என் அம்மாகூட சண்டை போடுவேன். அவங்களுக்கு என் அருமை தெரியணும்னு சித்தி வீட்டுக்குப் போயிட்டேன். சரியா படிக்கலை. பத்தாவதுல மார்க் கம்மினு திட்டினாங்க. நியூ இயருக்கு டிரெஸ் வாங்கித் தரச்சொல்லி போன் பண்ணினேன். `என்னைக் கூட்டிட்டுப் போயிடுமா!’னு அழுதேன். `நீ அங்கேயே சாவு... கூட்டிட்டுப் போக மாட்டேன்'னுட்டாங்க. `உன்னை வரவைக்கிறேன் பாரு'னு விளையாட்டாப் பண்ணினது, என் வாழ்க்கையையே நாசம் பண்ணிடுச்சு. மழைத் தண்ணி கலந்திருந்த மண்ணெண்ணெய்யை மேலே ஊத்திக்கிட்டு காஸ் அடுப்பை ஆன் பண்ணி, நான் போட்டுக்கிட்டிருந்த டி-ஷர்ட்டை நெருப்புல காட்டினதுதான் தெரியும். அப்புறம் மயங்கி விழுந்துட்டேன். கழுத்துக்குக் கீழே வெந்துடுச்சு. ரெண்டு தொடையில் இருந்து சதை எடுத்து வெச்சு தைச்சாங்க.

எங்க அம்மா ஒரு மாற்றுத்திறனாளி. அவங்க என்னை எப்படிப் பார்ப்பாங்கனு யோசிக்காம, இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன். இனிமேலாவது அம்மா, அப்பாவை நல்லபடியா பார்த்துக்கணும். அதுதான் என் ஆசை'' கடந்தகாலக் கசப்பை விழுங்கிச் சிரிக்கிறார் ப்ரியதர்ஷினி.

திருவள்ளூரைச் சேர்ந்த கோமளாவுக்கு, 22 வயது. பி.காம் முடித்திருக்கிறார். ஆனால், படிப்பு அவருக்கு வாழ்க்கைப் பாடத்தை போதிக்காமல்போனதுதான் சோகம்.

``ஒரு வாரத்துல காலேஜ்ல சேரணும். டிரெஸ் வாங்கலாம்னு தி.நகருக்கு வந்தோம். முதல்முறை தி.நகர் போன குஷியில் வீட்டுக்கு வர ராத்திரி 11 மணி ஆகிடுச்சு. அடுத்த நாள் காலையில் லேட்டா எழுந்திருச்சேன். பாட்டி அசிங்கமாத் திட்டினாங்க. அப்பா கூலி வேலை செய்றார். அவர் சம்பாதிக்கும் காசை அவரே வெச்சுப்பார். அந்தக் கடுப்புல என்னை அடிச்சு எழுப்பின என் அம்மா, `நான் வேலைக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள நீ செத்துடு'னு சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க. கோபத்துல மண்ணெண்ணெயை ஊத்திப் பத்தவெச்சுக்கிட்டேன். என் அலறல் கேட்டு அண்ணன்தான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தான். பிழைக்க மாட்டேன்னு சொன்னாங்க. `இந்தப் பொண்ணு வேணாம். ஊசி போட்ருங்க'னார் அப்பா. அம்மாதான் என்னைக் காப்பாத்தினாங்க. நாலு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். காலேஜுக்குப் போய், கட்டின பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தர மாட்டேன்னுட்டாங்க.

ஒரு வருஷம் கழிச்சு சிகிச்சை முடிஞ்சதும், என்னை காலேஜுக்குப் போகச் சொன்னாங்க. முடியாதுனு அழுதேன். கட்டாயப்படுத்தி அனுப்பிவைச்சாங்க. வீட்டைவிட்டு வெளியே போகவே அவமானமா இருக்கும். `படிப்புதான் உனக்கு துணையா வரும். நீ படிக்கணும்'னு அம்மா சொன்னதால் போனேன். காலேஜில் எல்லாரும் என்னை வித்தியாசமாப் பார்த்தாங்க. `காதல் தோல்வியா... இந்த வயசுல இப்படிப் பண்ணிக்கிட்டா, வேற என்ன காரணமா இருக்கும்?'னு கமென்ட் அடிச்சாங்க. இப்பவும் என்னைப் பார்க்கிறவங்க அப்படித்தான் கேட்பாங்க. பஸ்ல யாரும் பக்கத்துல உட்கார மாட்டாங்க. படிப்பை முடிச்சுட்டு வீட்ல இருந்தேன். இப்போ இங்கே வேலைபார்க்கிறேன். அடுத்து வாழ்க்கை என்னை எங்கே கூட்டிட்டுப் போகப்போகுதுனு தெரியலை'' என்ற கோமளாவின் பார்வை, கருகிச் சுருங்கிய அவரது கைகளின் மீது வெறிக்கிறது.

புனிதவள்ளி, பரிமளா, மாரியம்மாள் என `ரைட்டர்ஸ் கஃபே’யில் பணிபுரியும் அனைவருக்குமே இப்படி ஓர் உணர்ச்சிவயப்பட்ட கதை இருக்கிறது.

 ``கணவருக்கு, குடிப்பழக்கம் இருந்தது. ஆனாலும் அவரால் பிரச்னை இல்லை. மாமியாரும் அவரும் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டினாங்க. அது தாங்க முடியாமத்தான் பத்தவெச்சுக் கிட்டேன். என் பாப்பாவுக்கு அப்போ ஒண்ணேகால் வயசு. பால் குடிச்சுட்டிருந்தா. எதையும் யோசிக்காம கோபத்துல பண்ணிக்கிட்டேன். அம்மாதான் காப்பாத்தினாங்க. ஒரு நிமிஷம் யோசிக்காம எடுத்த முடிவுனால, இன்னிக்கு வெளியே நாலு பேர் முன்னாடி தலைநிமிர்ந்து நடக்க முடியலை. ஆரம்பத்துல எல்லாம் முகத்தை மூடிக்கிட்டுதான் வெளியே வருவேன். இப்போ அதெல்லாம் வேணாம்னு முடிவுபண்ணிட்டேன். தற்கொலைங்கிறது பிரச்னைகளுக்கான தீர்வு ஆகாது. செத்தாலும் பிழைச்சாலும் அது புதுப் பிரச்னைகளைத்தான் கொடுக்கும். என் வாழ்க்கையே அதுக்கோர் உதாரணம்'' என்னும் மாரியம்மாள், கஃபே வேலைகளில் செம பிஸி.

காபியும், கதைகளும், மனிதர்களும் என சுவாரஸ்யம் கூட்டுகிறார்கள்

வெறும் கஃபேயாக மட்டும் அல்ல... படிக்கும், எழுதும், உரையாடும் இடமாகவும் ஒரு கஃபே இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்காக உருவானதுதான் `ரைட்டர்ஸ் கஃபே’. எடுத்து வாசிக்க அலமாரி நிறையப் புத்தகங்களும், பார்த்து வாசிக்க டேப்லெட் நிறைய இ-புத்தகங்களும் இருக்கும். விருப்பப்பட்டால் புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம். `பிசிவிசி’ பிரசன்னா மூலம், தீ விபத்துக்குள்ளாகி மீண்ட பெண்களைப் பற்றித் தெரியவந்தது. அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஏதேனும் செய்ய நினைத்தார் பிரசன்னா. அப்போதுதான் ரைட்டர்ஸ் கஃபேயை அந்தப் பெண்களுக்கான இடமாகவும் மாற்றும் எண்ணம் வந்தது. `எங்களுக்குத் தேவை, உங்கள் பரிதாபம் அல்ல... ஆதரவு’ என்று சொல்லவைப்பதுதான் நோக்கம்’’ என்கிறார் கஃபேயின் உரிமையாளர் எம்.மகாதேவன்.
- ஜெனிபர் டேனியல்

Advertisement :
comments

Feedback